புதுப் படங்களில் பழைய இளையராஜா பாட்டு ட்ரண்ட்டு.. தொடங்கிவச்சது யாரு தெரியுமா..?

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும்  சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

80 களிலும் 90 களிலும் இளையராஜாவின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் அதிகம். படத்தில் என்ன இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஐந்து பாட்டு இருக்கும். அதில் அனைத்து பாட்டுகளும் பெரும்பாலும் ஹிட்டாகிவிடும். இந்நிலையில் இப்போது வரும் பல புதுப்படங்களில் பொருத்தமான இடங்களில் பழைய இளையராஜா பாடல்களைப் பொருத்துவது ஒரு புதிய ட்ரண்ட் ஆகியுள்ளது.

   

சமீபத்தில் ரிலீஸாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் மஞ்ஞும்மள் பாய்ஸ் படத்தில் கூட குணா படத்தில் இளையராஜா இசையமைத்த “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடலை உச்சகட்டமான ஒரு இடத்தில் பொருத்தி இருந்தனர். இதைப் பார்த்த ரசிகர்கள் மயிர்க்கூச்செறிந்து தியேட்டரே உணர்ச்சிப் பெருக்கானது.

மஞ்ஞும்மள் பாய்ஸ் மட்டும் இல்லை, சமீபத்தில் ரிலீஸான பார்க்கிங் படத்தில் உழைப்பாளி படத்தின் “ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது” பாடலை பயன்படுத்தி இருந்தனர். அதே போல கைதி படத்தில் “புது ரோட்டுலதான்” பாடலையும், 96 படத்தில் இளையராஜாவின் ஐந்து பாடல்களையும் பயன்படுத்தி இருந்தனர்.  அதே போல ஆரண்யகாண்டம் படத்திலும் பின்னணியில் பல ராஜா பாடல்கள் ஒலிக்கும். இப்படி இது ஒரு ட்ரண்ட்டாக இப்போது பலராலும் பின்பற்ற படுகிறது.

ஆனால் இந்த ட்ரண்ட்டை தொடங்கி வைத்தது 2008 ஆம் ஆண்டு வந்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் இயக்குனர் சசிகுமார்தான். சுப்ரமண்யபுரம் படத்தில் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் இடம்பெற்ற ‘சிறு பொன்மனி அசையும்” என்ற பாடலை பயன்படுத்தி இருந்தார். அதன் மூலம் அந்த பழைய பாடல் இளம் ரசிகர்களுக்கு அறிமுகமானது.