Connect with us

CINEMA

சேது படத்தின் க்ளைமேக்ஸாக பாலா எடுத்திருந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டு தன்னுடைய இசையால் மேஜிக் செய்த இளையராஜா!

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

அப்படி இன்றளவும் அவர் 80 கள் மற்றும் 90 களில் படங்களுக்கு இசையமைத்த பின்னணி இசைத் துணுக்குகள் மட்டுமே ரசிகர்களால் கேட்கப்பட்டு சிலாகிக்கப்படுகின்றன. அந்த வகையில் சேது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மாற்றி படத்துக்குக் கூடுதல் தாக்கத்தை உருவாக்கியுள்ளார் இளையராஜா.

சேது படத்தின் க்ளைமேக்ஸில் விக்ரம் மனநல விடுதியில் இருந்து தப்பி வந்து அபிதாவைக் காண அவர் வீட்டுக்கு செல்வார். அங்கே அவர் பிணமாகக் கிடத்தி வைக்கப்பட்டிருப்பார். அதைப் பார்த்ததும் அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மனநல விடுதிக்கே திரும்பிவிடுவதாக இருக்கும்.  இந்த க்ளைமேக்ஸ் காட்சியை முதலில் பாலா வேறு விதமாக படமாக்கி இருந்தாராம். விக்ரம் திரும்பி செல்லும்போது அவரிடம் சிவகுமார், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் வந்து உணர்ச்சிப்பூர்வமான வசனத்தைப் பேசி அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல முற்படுவார்கள்.

ஆனால் இந்த க்ளைமேக்ஸைப் பார்த்த இளையராஜா இயக்குனர் பாலாவிடம் “அவன் அந்த பிணத்தைப் பார்த்தபின்னர் அவனும் பிண்மாகி விடுகிறான். ஒரு நடைபிணமாகதான் அதன் பின்னர் அவன் வருகிறான். அதனால் மற்றவர்கள் பேசும் வசனம் எல்லாம் முக்கியமில்லை. அதையல்லாம் நீக்கிவிடு. நான் அந்த இடத்தில் ஒரு பாடலைப் போடுகிறேன் எனக் கூறி ‘வார்த்தை தவறிவிட்டேன்’ பாடலை அந்த இடத்தில் போட்டுள்ளார். அந்த பாடல் க்ளைமேக்ஸ் காட்சிக்கு வேறு ஒரு அழுத்தமான தாக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் ஜான் மகேந்திரன் சமீபத்தில் தன்னுடைய பாட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top