‘நிலா அது வானத்து மேல’ ஒரு தாலாட்டு பாட்டா?… இளையராஜா பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

By vinoth on சித்திரை 11, 2025

Spread the love

சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

   

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

உலகில் உள்ள எந்த இசையமைப்பாளரிடமும் இல்லாத தனித்துவம் இளையராஜாவிடம் உண்டென்றால் அவரிடம் ட்யூன்கள் அருவி போல கொட்டும் என்பது. இயக்குனர்கள் சூழலை சொன்னதும் சற்றுக் கூட யோசிக்காமல் இளையராஜா ட்யூன்களை பாடிவிடுவார் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதே போல ஒரு ட்யூனை வெவ்வேறு சூழலுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றிப் பயன்படுத்தலாம் என்பதையும் அவர் கூறியுள்ளார். அதற்கு ஒரு உதாரணம்தான் நாயகன் படத்தில் இடம்பெற்ற ‘நிலா அது வானத்து மேல’ பாடல்.

 

இளையராஜாவின் எவர் க்ரீன் ஹிட் பாடலான ‘நிலா அது வானத்து மேல பாடலை தான் ஒரு தாலாட்டு பாடல் ட்யூனாகதான் உருவாக்கியதாகவும், ஆனால் மணிரத்னம் கேட்டுக் கொண்டதற்காக அதன் ஆர்க்கெஸ்ட்ரேஷனை மாற்றி நிலா அது வானத்து மேல பாடலாக மாற்றியதாகவும் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜாவின் ஒரு இசை நிகழ்ச்சியில் தனுஷ் அந்த பாடலுக்கு வரிகளை மாற்றிப் போட்டு தாலாட்டுப் பாடலாக பாடியது குறிப்பிடத்தக்கது.