தமிழ் சினிமாவிற்கு இளையராஜா என்ற ஜாம்பவானைக் கொடுத்தது ‘அன்னக்கிளி’ திரைப்படம். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புயலாக வந்தார் இளையராஜா. அதன் பின்னர் ஐம்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் மையப் பேசுபொருளாக இருந்து வருகிறார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னால் பல இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அப்படி பணியாற்றியவர்களில் ஒருவர்தான் ஜி கே வெங்கடேஷ். அவர் சொன்ன ஒரு வார்த்தையால் காயம்பட்ட சம்பவத்தை இளையராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஏன் உதவி இசையமைப்பாளர்கள் வைத்துக் கொள்வதில்லை என்பது பற்றி இளையராஜா பேசியுள்ளார். அதில் ”நான் அன்னக்கிளி இசையமைக்கும் போது என் பாடல்கள் பற்றி என் நண்பன் செல்வராஜ் ஜி கே வெங்கடேஷ் அண்ணாவிடம் சென்று பாராட்டிப் பேசியுள்ளார். அதற்கு அவர் ‘ பாட்டு எல்லாம் எல்லோரும் போடலாம். ஆனால் ராஜாவுக்கு ரி ரெக்கார்டிங் வாசிக்கத் தெரியாது’ என சொல்லியுள்ளார்.
அவர் இப்படி சொன்னதைக் கேள்விப்பட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் அவரிடம் வேலை பார்க்கும் போது பல படங்களுக்கு அவர் பிஸியாக இருக்கும் போது பின்னணி இசை அமைத்துள்ளேன். அன்றைய தினம்தான் முடிவு செய்தேன். என்றுமே நான் எனக்கு உதவியாளர்கள் வைத்துக் கொள்ள மாட்டேன். என் இசை நல்லதோ, கெட்டதோ அது எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கப்படட்டும், ஆனால் அது என்னுடையதாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.