சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜா இசையமைப்பாளராக இன்று தொட்டுள்ள உயரம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருக்குள் வேறு பல திறமைகளும் இருந்துள்ளன. உதாரணமாக அவர் புகைப்படம் எடுப்பது, வெண்பா எழுதுவது என பல தளங்களில் இயங்கியவர். ஆனால் அவருக்கு ஓவியம் வரையும் திறமையும் இருந்துள்ளது என்பது பலரும் அறியாதது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதை அவரே பகிர்ந்துள்ளார். அதில் “எனக்கும் பாரதிராஜாவுக்கும் ஓவியம் வரைவதில் போட்டி நடக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் நான் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் எல்லாக் கலைகளையும் கற்றுக்கொள்வது துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று எங்கள் வீட்டில் சொன்னார்கள்.” எனக் கூறியுள்ளார்.
