பெற்றோர்களே உஷார்!.. உங்க புள்ள பைக்ல பள்ளிக்கு போனா இனி ‘இதுதான்’ தண்டனை.. தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் சூழல்களை ஆய்வு செய்து, மே 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர்களுக்கான சுகாதாரம், தூய்மையான குடிநீர் வசதி, தடையற்ற போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகளின் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்கப்படும் அதே வேளையில், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்துத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மிக முக்கியமான மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாகப் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அனைத்துப் பள்ளிகளிலும் ‘சாலை பாதுகாப்பு மன்றம்’ அமைக்கப்பட வேண்டும் என்றும், அதனை உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னின்று வழிநடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தினமும் காலை வழிபாட்டு கூட்டத்தில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்களிடம் பகிர வேண்டும் என்றும், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் சாரணர் இயக்க மாணவர்களுக்குப் போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

   

இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தலைக்கவசம் (Helmet) அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்கள் எவரேனும் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு வந்தால், அந்த வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்யப் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைப் பள்ளிக்கு நேரில் வரவழைத்து, உரிய அறிவுரைகளை வழங்கிய பிறகே அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்கு வெளியிலும் மாணவர்கள் உரிமம் (License) இன்றி இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான விழிப்புரை வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தனது சுற்றறிக்கையில் மிகக் கறாராக வலியுறுத்தியுள்ளது.