“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

By Muthu Mani on ஆனி 6, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருளாளராகப் (Software Engineer) பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சுவேதா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.

ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சுவேதா ஆகிய இருவரது காதலும் பெற்றோருக்குத் தெரியவரவே, ஆரம்பத்தில் இருதரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துத் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடிவு செய்தனர். ஆனால், நாட்கள் செல்லச் செல்லப் பெண்ணின் பெற்றோர் தீபக்கை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணம் தள்ளிப்போன சூழலில், மதம் மாற விருப்பமில்லாத தீபக் கடந்த சில நாட்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

   

இந்நிலையில், நேற்று மாலை அயப்பாக்கத்தில் உள்ள காதலி சுவேதாவின் வீட்டிற்குச் சென்ற தீபக், திருமணம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது இருவீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், மேலும் மனமுடைந்த தீபக் திடீரென அங்கிருந்த படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால், சுவேதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, தீபக் அங்கிருந்த பேன் கொக்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தீபக்கின் உடலைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சுவேதாவின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.