திமுக vs தவெக… “அதிகார திமிரு இன்னும் இறங்கல…” ஸ்டாலினின் மிரட்டல் அறிக்கைக்கு தவெக ஐடி விங் கொடுத்த ஷாக் ரியாக்‌ஷன்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

By Visaka on ஆடி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்யை ஒருமையில் பேசியும், சட்டசபையைக் கூட்டினால் எலும்பை உடைப்போம் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்த விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, காவல்துறையினருக்குப் பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். தவெக அரசு விமர்சனங்களுக்கு அஞ்சி அராஜகம் செய்வதாகவும், இது சாத்தானின் ஆட்சி என்றும் ஸ்டாலின் சாடியிருந்தார்.

இதற்கு தவெக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மிகக் கடுமையான மொழியில் அறிக்கை வெளியிட்டு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. அரசியலை ஒரு வியாபாரமாகச் செய்யும் ‘வெண்டிங் மெஷின்’ தான் திமுக என்று விமர்சித்துள்ள தவெக, தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்துவிட்டு, அதற்கு ‘எதிர்க்கட்சி ஜனநாயகம்’ என திமுக தலைமை எகத்தாளம் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று திமுக அநாகரிக அரசியல் புரிந்து வருவதை தமிழக மக்கள் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் தவெக சாடியுள்ளது.

   

ஆட்சி அதிகாரத்தின் மமதை இன்னும் குறையாமல், காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டும் தொனியில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதை தவெக வன்மையாகக் கண்டித்துள்ளது. “அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் ஓங்கி அடித்ததை திமுக மறந்துவிட்டது” என்று சுட்டிக்காட்டியுள்ள தவெக, நீதிநெறி மறந்து செயல்படும் திமுக, தான் விதைத்த வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யப் போவது உறுதி என எச்சரித்துள்ளது. இந்த அனல் பறக்கும் அரசியல் மோதல் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.