அமெரிக்க ராணுவத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் போட்ட அதிரடி உத்தரவு…. நான் கொல்லப்பட்டால் ஈரானை சிதைத்துவிடுங்கள்…. உலக நாடுகள் அதிர்ச்சி…!

By SATHISH R on ஆடி 11, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பல ஆண்டுகால மோதல் போக்கு உலக அரங்கில் தொடர்ந்து பதற்றத்தை நீடிக்கச் செய்து வருகிறது. இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒருவேளை தன்னை படுகொலை செய்யும் முயற்சியில் ஈரான் வெற்றி பெற்றுவிட்டால், அந்நாடு இதுவரை கண்டிராத வகையிலான மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம் மேற்கொள்ள வேண்டும் என தான் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

   

ஈரானின் கொலைப் பட்டியலில் தான் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தன்னை குறிவைத்து ஈரான் பல ஆண்டுகளாகச் சதித்திட்டம் தீட்டி வருவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் இஸ்ரேல் இதுதொடர்பான உளவுத் தகவல்களை வழங்கியதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அவர்களின் இலக்காக இருப்பது நீண்டகால உண்மை, வாழ்க்கை அப்படித்தான்; தற்போது உடனடி படுகொலை சதி குறித்து புதிய தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அவர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் குண்டுமழை பொழிந்து ஈரானை சிதைக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்” என அதிரடி காட்டியுள்ளார்.

   

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த உச்சக்கட்ட பகைக்கு முக்கிய வரலாற்றுப் பின்னணி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பாக்தாத் அருகே ஈரானின் உயர்மட்ட ராணுவத் தளபதியான காசெம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார். இதற்குப் பழிவாங்கவே ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது. கடந்த 2024 ஜூலை மாதத்தில் பட்லர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி நூலிழையில் தவறியதும், அதன்பின்னர் ஈரானுடன் தொடர்புடைய பல சதித்திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இரு நாடுகளும் தற்காலிகமாக ராணுவத் தாக்குதல்களைக் கைவிட்டுள்ள நிலையில், மத்தியஸ்த நாடுகள் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு ஈரான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள ட்ரம்ப், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான முந்தைய போர் நிறுத்தம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.