தமிழக அரசியல் களம் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முற்றிலும் புதிய திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை என அனைத்துப் பிரதான கட்சிகளும் தங்களது ‘இளம் முகங்களை’ முன்னிறுத்திக் களமிறங்கியுள்ளன. இந்த அதிரடி அரசியல் மாற்ற சூழலில், அதிமுகவிலும் ஒரு வலுவான இளம் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்தத் தேர்தல் தோல்வி குறித்த கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், மாற்றுக் கட்சிகள் அனைத்தும் தங்களது அடுத்த தலைமுறை இளம் தலைவர்களைக் கொண்டு தேர்தலைச் சந்தித்து வென்றுள்ளதைச் சுட்டிக்காட்டினர். மேலும், சமூக வலைதளங்களை அவர்கள் மிகத் துல்லியமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால், அதிமுகவிலும் மூத்த தலைவர்களின் வாரிசுகளை, குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை உடனடியாக அதிகாரப்பூர்வமாகக் கட்சிப் பணிகளில் களமிறக்க வேண்டும் என்று நேரடியாகவே கோரிக்கை வைத்துள்ளனர்.
விஜய், உதயநிதி, அண்ணாமலை போன்ற இளம் தலைவர்கள் இன்று தமிழக இளைஞர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து வரும் சூழலில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி போன்ற சீனியர்களே இன்னும் முன்னணியில் உள்ளனர். இன்றைய டிஜிட்டல் அரசியல் யுகத்தில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைஞர்களைக் கவர மிதுன் பழனிசாமி போன்ற ஒரு புதிய, படித்த இளம் முகம் கட்சிக்குத் தற்போதைய அவசரத் தேவையாக மாறியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் மிதுன் பழனிசாமியை அதிமுகவுக்குள் கொண்டு வருவதற்கான தீவிர ஆலோசனைகள் கட்சிக்குள் அரங்கேறி வருகின்றன.
இருப்பினும், திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் வாரிசு மற்றும் சினிமா பின்புலத்துடன் இளைஞர்களைக் கவர்ந்து வரும் வேளையில், மிதுன் பழனிசாமி இதுவரை லைம்லைட்டிற்கே வராதவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் நிழலிலேயே வளர்ந்தவர் என்பதால், அவரின் அரசியல் திறமைகள் என்ன என்பது கூட இன்னும் அதிமுகவினருக்கே முழுமையாகத் தெரியவில்லை. இதனால், அவர் அரசியலுக்குள் நுழைந்தாலும் மற்ற இளம் தலைவர்களுக்கு இணையாக இளைஞர்களைக் கவர முடியுமா மற்றும் அதிமுகவை மீண்டும் பழைய எழுச்சிமிக்க நிலைக்குக் கொண்டு வர முடியுமா என்ற விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
