நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்தே போட்டியிடும் என பேசியுள்ளார். வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் அமைக்கும் பறக்கும் படை வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிக்காரர்களை பிடிப்பதில்லை.
அதற்கு மாறாக மளிகை கடைக்கு செல்வோரை, மருத்துவமனைக்கு பணம் கொண்டு செல்வோரை, திருமணத்திற்கு பணம் கொண்டு செல்பவர்களை தான் பிடிக்கின்றது. கூட்டணி வைத்ததால் விஜயகாந்துக்கு என்ன ஏற்பட்டது என்பதை அறிவேன். எனவே எக்காரணம் கொண்டும் கூட்டணி வைக்க மாட்டேன். நாம் தமிழர் அமைப்பாக இருந்து பின்னர் தேர்தலில் ஈடுபடத் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. எங்களுக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி குறித்து சந்தேகம் எழுந்தால் என்னிடம் கேளுங்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
