அமைச்சர் பதவிக்கு ஆப்பு?… மதுரையை ரணகளமாக்கும் அதிகாரப் போட்டி…. ஒற்றை ஆளாக நின்று பி.டி.ஆரை எதிர்க்கும் மாநகரப் புள்ளி.. அதிரும் அறிவாலயம்..!!!

By Rajeshwari on பங்குனி 10, 2026

Spread the love

மதுரையில் நிலவும் திமுகவின் உள்கட்சி அரசியல் மற்றும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதிக்கும் இடையிலான அதிகாரப் போட்டி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட பி.டி.ஆர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக 20-க்கும் மேற்பட்டோரை மனுத்தாக்கல் செய்ய வைத்ததன் பின்னணியில் தளபதி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் பி.டி.ஆர் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரானால், அது தனது அரசியல் எதிர்காலத்தையும் அமைச்சர் கனவையும் பாதிக்கும் என கருதும் தளபதி, பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்கத் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

   

இந்த மோதல் வெறும் விருப்ப மனுக்களுடன் நிற்காமல், தேர்தல் களத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பி.டி.ஆருக்காக மகளிர் அணியினர் தேர்தல் வேலைகளில் ஈடுபடக்கூடாது என்றும், அவர்கள் தளபதி போட்டியிட விரும்பும் மதுரை வடக்கு தொகுதியில்தான் பணியாற்ற வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

   

இந்த உள்ளடி வேலைகளால் அதிருப்தியடைந்த பி.டி.ஆரின் ஆதரவாளர்கள், இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு விரிவான புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். மதுரையில் முற்றி வரும் இந்த கோஷ்டி பூசல், வரும் தேர்தலில் கட்சியின் ஒட்டுமொத்த வெற்றியையும் பாதிக்குமோ என்ற அச்சத்தை திமுக தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளது.