நாசிக் TCS மதமாற்ற வழக்கு: “பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று நமாஸ் கற்றுக்கொடுத்தேன்” – உண்மைகளை ஒப்புக்கொண்ட நிதா கான்..!!

By Swetha on ஆனி 8, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பெண் குற்றவாளியான நிதா கான் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணுக்கு தொழுகை செய்யும் முறைகள் மற்றும் இஸ்லாமிய மதச் சடங்குகள் குறித்துக் கற்றுக்கொடுத்ததாக நிதா கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி குறித்து விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன. நிதா கானின் இந்த புதிய வாக்குமூலத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மத ரீதியான தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் கட்டாய மதமாற்ற சதி மற்றும் மிரட்டல்கள் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்காக டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

   

நாசிக் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் இதுவரை மொத்தம் 9 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் முடிவடைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.