நடுவானில் உறைந்துபோன நிமிடங்கள்…. “நான் சாக விரும்பல” கதறிய பைலட்…. 45 நிமிடம் போராடி உயிர் மீட்ட ஜார்ஜிய டாக்டர்….!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

ஃபிளை துபாய் விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட விபத்து அல்லது உடல்நலக்குறைவால் கடுமையாகக் காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை, அதே விமானத்தில் பயணித்த ஜார்ஜியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் ஷோட்டா முசாயேவ் தனது துரிதமான செயலால் காப்பாற்றியுள்ளார். பைலட்டின் தலையிலும் இடது கையிலும் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்திய மருத்துவர், சுமார் 45 நிமிடங்கள் அவரிடம் தொடர்ந்து பேசி அவரை மயக்கமடையாமல் பாதுகாத்தார். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தபோதிலும், ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி காயத்தை மெதுவாகக் கையாண்டதோடு, நாடித்துடிப்பு குறைந்தபோது அவரது கால்களை உயர்த்தி வைத்து நிலைமையைச் சீராக்கினார்.

   

மச்சாரின் உதடுகள் நீல நிறமாக மாறியதுடன், மரண பயத்தில் “தயவுசெய்து எனக்கு உதவுங்கள், நான் இங்கே இறக்க விரும்பவில்லை” என்று அவர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் உலுக்கியது. அந்த இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாமல் விழிப்புடன் செயல்பட்ட மருத்துவர் முசாயேவ், விமானப் பணியாளர்களிடம் உடனடியாக விமானத்தைத் தரையிறக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். வலியால் அவதிப்பட்டு மாத்திரை கேட்டபோதும், உடல்நிலை கருதி அதை அவர் தவிர்க்கச் செய்தார். விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் மச்சாரை அங்கிருந்த மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்த அவர், ‘குட் லக், என் நண்பரே’ என்று கூறி வழங்கிய நம்பிக்கையான வார்த்தைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.