“நான் முதலில் தமிழன்..” பாஜாக-வை உதறிய முதல் நாளே அண்ணாமலை போட்ட வெடி.. அலறும் டெல்லி..!!

By Muthu Mani on ஆனி 6, 2026

Spread the love

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விலகிய சில மணி நேரங்களிலேயே தனது சமூக வலைத்தளம் வழியாகப் பேசிய அண்ணாமலை, “நான் ஒரு பாஜகக்காரனா அல்லது தமிழனா என்ற முரண்பாடு எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்தது; ஆனால் நான் ஒருபோதும் தமிழன் என்ற அடையாளத்தைச் சமரசம் செய்து கொண்டதில்லை” என்று ஓப்பனாகப் பதிவு செய்துள்ளார். கடந்த 2025 டிசம்பர் மாதமே தான் விலகும் முடிவை டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்குமாறு தலைமை கேட்டுக்கொண்டதால் இவ்வளவு காலம் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராஜினாமாவிற்குப் பின்னால் டெல்லியில் மிகப்பெரிய அரசியல் டிராமாவே அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக ஏர்போர்ட் புறப்பட்டுள்ளார். அப்போது பாஜாக மத்தியத் தலைமை அவரை அவசரமாகத் திரும்ப அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தன்னை மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவராக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு முழுமையான தன்னாட்சியும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் தனி அரசியல் பாதையை நோக்கிப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இரண்டு அதிரடி ஆப்ஷன்களை அண்ணாமலை முன்வைத்துள்ளார். ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படாமல் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

   

தமிழகத்தில் ஒரு தேசிய கட்சி உருவெடுத்துத் தனித்து ஆதிக்கம் செலுத்துவதற்கான சூழல் இப்போதைக்குக் குறைவாகவே இருப்பதாகக் கருதும் அண்ணாமலை, தமிழக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய பிராந்தியக் கட்சியைத் தொடங்குவதே தனது திட்டம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியலில் தூய்மை இருக்க வேண்டும் மற்றும் சோஷியல் மீடியா அவதூறுகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், புதிய இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வர ஒரு தனி இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். இந்தத் தளத்தில் இணையும் இளைஞர்களுக்கு முறையான அரசியல் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

   

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்புமே பெரும் சரிவைச் சந்தித்தன. அதே நேரத்தில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றியைப் பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்குப் பிறகுதான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய பிராந்தியக் கட்சியைத் தொடங்கினால் தமிழகத்தில் சாதிக்க முடியும் என்ற கணக்கோடு அண்ணாமலை களமிறங்கியுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையின் இந்தத் தனிப்பாதை நகர்வு, தமிழக அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.