ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில் சோகைல் என்பவருக்கும், 23 வயது ஷாகுப்தா பர்வீனுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் கேட்டு சோகைல் தனது மனைவியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டு சமாதானம் பேசப்பட்டும், வரதட்சணை வெறி அடங்காத சோகைல் தனது மனைவியை மீண்டும் சித்திரவதை செய்துள்ளார்.
சம்பவத்தன்று மதுபோதையில் வீடு திரும்பிய சோகைல், தனது மனைவியிடம் வரம்புமீறி நடக்க முயன்றபோது அவர் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் போதை வெறியில் ஷாகுப்தாவை அவர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவர்களின் 45 நாண்களே ஆன பச்சிளம் குழந்தை ஜோகான் அழுது துடித்ததால், அக்குழந்தையையும் சோகைல் இரக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, ஷாகுப்தாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவன் சோகைலை கைது செய்தனர். தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சோகைலுக்கு, ஒரு தாயையும் பச்சிளம் குழந்தையையும் கொன்ற இந்த நயவஞ்சகச் செயலுக்காக சட்டத்தின்படி தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
