தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல் படையினர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, மகபூப் பீக்கும் அவரது கணவர் சதீஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சதீஷ், தனது மனைவியின் கழுத்தை முறுக்கி தலையைத் தரையில் ஓங்கி மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். முன்னதாக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த சதீஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து நீக்கப்பட்டவர் ஆவார். குடும்பப் பிரச்சினைகள் மற்றும் கணவரின் குடிப்பழக்கம் காரணமாக இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த நல்கொண்டா டவுன் காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கணவர் சதீஷைக் கைது செய்துள்ளனர்.
