மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள வீடொன்றில், சனிக்கிழமை அதிகாலை வேளையில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்தவர் த்வாரகா படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற பின்னர், அவர் இரத்தம் தோய்ந்த கோடரியுடன் தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த நிலையில், காவல் துறையினர் அவரைத் தேடிவந்து உடனடியாகக் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் த்வாரகா படேலின் மனைவி கேமா பாய் (27) மற்றும் அவர்களின் 1, 4 மற்றும் 7 வயதுடைய மூன்று பிஞ்சுக் குழந்தைகள் எனப் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் சனிக்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலையிலும் இருவருக்கும் இடையே மீண்டும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக ஆத்திரமடைந்த த்வாரகா படேல், கோடரியை எடுத்து மனைவி மற்றும் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
