மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் (MauGanj) மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், சைலேந்திர படேல் என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில நாட்களிலேயே தம்பதியினருக்கு இடையே கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்தப் பெண் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சமாதானமாகி மீண்டும் தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கணவர் சைலேந்திர படேல் தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, அவரை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார். அத்தோடு நிறுத்தாமல், ஆத்திரத்தின் உச்சியில் மனைவியின் பிறப்புறுப்பில் பிளாஸ்டிக் பைப்பைச் செலுத்தி கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் வன்கொடுமையால் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்து, உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த கொடூரச் செயலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய கணவன் சைலேந்திர படேலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
