உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண்ணை இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி, பின்னர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க தனது மாமனார் மற்றும் மைத்துனருடன் உடல் உறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மெஹக் கான் என்ற அந்தப் பெண், 2021 ஆம் ஆண்டு ஷா ஃபஹீத் என்பவரை மணந்தார். திருமணமான உடனேயே, தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வரதட்சணையையும், ஒரு காரையும் கேட்க தொடங்கியுள்ளார்கள். ஆனால் அதை கொடுக்காததால் அவரது கணவரின் குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தில்,அப்பெண்ணுக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு சித்திரவதையின் அளவு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. அவரது அடுத்த கர்ப்பத்தின் போது, குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன்களில் இரண்டு கருக்களும் பெண் கருக்கள் என்பது தெரியவந்த பிறகு, இரண்டு கருக்கலைப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மேஹக் குற்றம் சாட்டினார். மேலும், ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக, தனது மாமனார் மற்றும் மைத்துனருடன் உடல் ரீதியான உறவு கொள்ளுமாறு ஃபஹீத்தின் தாய் அறிவுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதனையடுத்து வரதட்சணை கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப வேண்டாம் என்று அவரது மாமியார் கூறியதாக கூறப்படுகிறது. அவரது புகாரின் அடிப்படையில், அவரது கணவர், மாமியார், மைத்துனர்கள் மற்றும் மைத்துனர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
