ஈரோடு மாவட்டம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் மினி வேன் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 2018-ஆம் ஆண்டு தீபா தனது கணவரை பிரிந்து சென்றார்.
அதன் பிறகு கணவரால் கைவிடப்பட்ட ஜெயசக்தி என்ற பெண்ணை முருகேசன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து முருகேசனுக்கு 2-வது மனைவியுடனும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று முருகேசன் ஜெய் சக்தியை அழைத்துக் கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த முருகேசன் கத்திரிக்கோலால் ஜெயசக்தியின் கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த ஜெயசக்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
