உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அரங்கேறியுள்ள ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹஸ்தினாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற நபர், தனது மனைவியின் காதலரான சுனில் என்பவரைப் பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
மேலும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுனில் தனது மனைவியுடன் ஓடிச் சென்றதால் ஆத்திரமடைந்த பிரதீப், இந்தத் திட்டமிட்ட பழிவாங்கலைச் செய்துள்ளார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் சுனிலை மூன்று முறை சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைக்குப் பிறகு பிரதீப் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அறிக்கை சமூகத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதில், “வீட்டை விட்டு ஓடிப் போகும் பெண்கள் யாராக இருந்தாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், நானே அவர்களைக் கொன்று விடுகிறேன்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் தனது மனைவியையும் விரைவில் கொல்லப்போவதாக அறிவித்துள்ள அவர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததே தான் ஆயுதம் ஏந்தியதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தப்பியோடியுள்ள பிரதீப்பை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
