கேரள மாநிலம் கொல்ல மாவட்டத்திலுள்ள சதயமங்கலம் கிராமத்தை சேர்ந்த சஜிர் என்பவருடைய மனைவி ரெஜிலா (36). இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சஜீர் தன்னுடைய மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பி வந்துள்ளார். மாந்திரீகத்தில் ஈடுபாடு கொண்ட அவர் பேய் விரட்டுவதாக கூறி தன்னுடைய மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி உள்ளார். ஏற்கனவே ரெஜிலா இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார். அப்போது போலீசார் சஜீரை நேரில் அழைத்து எச்சரித்தனர். ஆனால் அதன் பிறகு அவர் தன்னுடைய மனைவியை அடிப்பதை நிறுத்தவில்லை.
அதுமட்டுமல்லாமல் ஊரில் உள்ள மந்திரவாதிகள் சிலரிடம் சென்று பேய் விரட்டுவதற்கான மாந்திரீக பயிற்சிகளை கற்று வந்துள்ளார். அதன்படி ஆஞ்சல் பகுதியில் உள்ள உஷ்தாத் என்ற மந்திரவாதியை சந்தித்துள்ளார். அந்த மந்திரவாதி கூறியபடி மனைவியை வைத்து சில சடங்குகளை செய்துள்ளார். அதன்படி தன்னுடைய மனைவியை அழைத்த சஜீர் மனைவியின் தலை முடியை கலைத்துவிட்டு உடல் முழுவதும் சாம்பலை பூசி மாந்திரீக கயிற்றை கையில் கட்டிக்கொண்டு பேய் ஓட்டுவதற்கான சடங்குகளை செய்ய முயற்சித்தார். ஆனால் இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சஜீர் வீட்டின் சமையலறையில் இருந்த சூடான மீன் குழம்பை எடுத்து வந்து மனைவியின் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் கதறி துடித்த ரெஜிலாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சஜிர் அங்கிருந்து தப்பி சென்று விட்ட நிலையில் மருத்துவமனையில் ரெஜிலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அந்த சிறுவனையும் சஜீர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஜீரை வலைவீசி தேடி வருகின்றனர். மூடநம்பிக்கையால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது
