தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தா (58) வீடுகளில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், அவர் தினமும் பணி முடிந்து தாமதமாக வீடு திரும்புவதை நரசிம்ஹ சந்தேகப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தம்பதியிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29 அன்று ஆத்திரமடைந்த நரசிம்ஹ, தனது மனைவியை கோடரியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
மறுநாள் காலையில் வசந்தா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். தலைமறைவாக இருந்த நரசிம்ஹவை தனிப்படை அமைத்துத் தேடி வந்த காவல்துறையினர், கட்டுமானப் பணியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அவரைத் தூக்கிக் கைது செய்தனர். வறுமையிலும் உழைத்து வந்த மனைவியை, கணவனே சந்தேகத்தின் பேரில் கோடரியால் சிதைத்துக் கொன்ற இந்த பயங்கரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.
