“அவருடன் தான் வாழ்வேன்…” குழந்தையுடன் மனைவியை அறையில் வைத்து பூட்டிய கணவர்… நீண்ட நேர போராட்டம்…. சகோதரரின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

By Devi Ramu on கார்த்திகை 15, 2026

Spread the love

சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தையுடன் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட இளம்பெண்ணைப் போலீசார் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகக் கணவன்-மனைவி இடையே கடுமையான குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் ஏற்கனவே குழந்தையுடன் தனது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், கணவர் தரப்பில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நேற்று திடீரென அந்த இளம்பெண் தனது குழந்தையுடன் கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவர், அறைக்குள் இருந்த இளம்பெண் மற்றும் குழந்தையை வெளியே வரவிடாமல் தடுத்து, வீட்டின் கதவைப் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாக அறையிலிருந்து வெளியே வர முடியாமல் குழந்தையுடன் சிக்கித் தவித்த அந்தப் பெண், தனது செல்போன் மூலம் நிலைமையை விளக்கி உதவி கேட்டு வீடியோ ஒன்றைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்துள்ளார்.

   

இந்தத் துயரமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மணலி காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து சென்று அறையின் பூட்டை உடைத்துத் தாயையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, அந்த இளம்பெண் தனது கணவருடன் தான் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

   

இதற்கிடையே, பெண்ணின் சகோதரர் ஊடகங்கள் மற்றும் போலீசாரிடம் அளித்த புகாரில், தனது தங்கையைக் கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இளம்பெண்ணின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.