கர்நாடக மாநிலம் ஹளேபீடு அருகே உள்ள சனேனஹள்ளியைச் சேர்ந்த ககனா (38) என்பவருக்கும், கேசகோடு கிராமத்தைச் சேர்ந்த ரகு (41) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 12 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் சிக்பமகளூரில் பேக்கரி தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். வெள்ளிக்கிழமை அன்று தங்களது சொந்த ஊரான கேசகோடு கிராமத்திற்கு இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே ரகு தனது மனைவி ககனாவை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த கையோடு தனது உறவினர்களுக்கு வீடியோ கால் செய்த ரகு, மனைவியைக் கொன்று சடலத்தை யாகச்சி கால்வாயில் வீசிவிட்டதாகக் கூறி பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் தனது கிராமத்திற்குச் சென்ற அவர், அங்குத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த அரேஹள்ளி காவல் துறையினர் ரகுவின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் யாகச்சி கால்வாயில் வீசப்பட்டதாகக் கூறப்படும் ககனாவின் சடலத்தைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினருடன் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
