அமெரிக்காவின் சிகாகோ நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது அங்குர் படேல் என்பவர், பிரிந்து வாழ்ந்த தனது 32 வயது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், மனைவி வேறொருவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பியதே இக்கொடூரச் செயலுக்குக் காரணமாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களது மகளைச் சந்திக்கலாம் என்று கூறி மனைவியை சிகாகோவுக்கு வரவழைத்த படேல், அவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரமடைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
கொலைக்குச் சில நாட்களுக்கு முன்பே அவர்களின் மகள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விவகாரம் அந்தப் பெண்ணுக்குத் தெரியவராத நிலையில், சிகாகோ வந்த அவர் கணவருடன் இணைய மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி படேல் கொலை செய்துள்ளார். வீட்டின் வெளியே காத்திருந்த மனைவியின் புதிய துணை அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதுடன், அங்குர் படேலின் நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலும் இக்கொலை வெளிச்சத்திற்கு வந்தது. உடற்கூறாய்வு அறிக்கையில், அந்தப் பெண் தற்காத்துக் கொள்ள முயன்றதற்கான காயங்களும் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயலுக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்ட அங்குர் படேல், சிகாகோவின் ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கவுண்டர் மூடப்பட்டிருந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கிய அவர், புதிய ஆடைகளை வாங்கியதுடன் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் மறைத்து வைத்துள்ளார். மறுநாள் விமானத்தில் ஏற முயன்றபோது காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட அவர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
