ஜார்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் பதாமா பகுதியில் முகேஷ் குமார் மேத்தா (30) மற்றும் செவ்வந்தி குமாரி (23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இப்படியான நிலையில் செவ்வந்தி குமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் முகேஷ் குமார் தன் மனைவியை மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது செவ்வந்தி குமாரி உயிரிழந்தால் 30 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பணம் வரும் என்பதற்காக திடீரென்று முகேஷ் குமார் அவரை ஹெல்மெட்டால் தலையில் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். புது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு அதனை சாலை விபத்து போல மாற்றி நாடகமாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவருக்கும் சிறு சிறு காயத்தை தானே ஏற்படுத்தியுள்ளார். பிறகு சாலை விபத்தில் மனைவி உயிரிழந்ததாக அனைவரும் நினைத்த நிலையில் முகேஷ் குமாரின் செயல்பாடுகளில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவர் புது மனைவியை கொலை செய்த தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கணவன் மனைவி இருவரும் சாலை விபத்தில் சிக்கி காயங்களுடன் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த முகேஷ் குமார் அவருடைய மனைவி ஆகியோரை மீட்ட உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செவ்வந்திகுமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். காயங்களுடன் இருந்த முகேஷ் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு செவ்வந்தி குமாரியின் இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில் கணவரின் செயல்பாடுகளில் உறவினர்களிடையே சந்தேகம் வந்துள்ளது. இதனால் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் செவ்வந்தி குமாரி உயிரிழந்து விட்டால் விபத்து காப்பீடு தொகை 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
செவ்வந்தி குமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவரை சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில் முகேஷ் அழைத்துச் சென்றதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மனைவியை ஹெல்மெட்டால் தலையில் சரமாரியாக அடித்தும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. போலீசார் தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 மாதத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் மனைவியை கணவர் அடித்து கொலை செய்து நாடகம் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
