ஐதராபாத், குக்கட்பள்ளி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு இடையே, உடல் எடை தொடர்பான விசித்திரமான காரணத்தால் தகராறு ஏற்பட்டு, மனைவி மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தனது மனைவி ஒல்லியாக இருப்பது கணவருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது மனைவி குண்டாக மாற வேண்டும் என்பதற்காக, அவர் சமூக வலைதளங்களில் இதற்கான ஆலோசனைகளைத் தேடியுள்ளார்.
அப்போது, தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற தகவலைக் கண்ட கணவர், தினமும் தயிர் சாப்பிடுமாறு தனது மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணிற்கு பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் என்றாலே அறவே பிடிக்காது என்பதால், இதனைத் தொடர்ந்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, குண்டாக இருந்தால் தான் அழகு எனக்கூறி கணவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அவரது மனைவி திடீரென வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் குக்கட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “தயிர் சாப்பிடச் சொன்னதால் மனைவி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்” என கணவர் போலீசாரிடம் புலம்பியதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாயமான பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
