“மன்னித்து ஏற்ற கணவன்.. மரிக்க வைத்த மனைவி”…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து விடிய விடிய… சினிமா பாணியில் நடந்த பயங்கரம்..!

By Nanthini on மாசி 7, 2026

Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார், தனது மனைவி காவ்யாவின் தவறான நடத்தையை மன்னித்து ஏற்றுக்கொண்ட போதிலும், இறுதியில் அதே மனைவியாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவ்யாவிற்கும் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக, ஏற்கனவே இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். பின்னர் பெரியோர்களால் சமரசம் செய்யப்பட்டு காவ்யா மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

மீண்டும் கணவருடன் வாழத் தொடங்கிய பின்னரும் காவ்யா தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. கார்த்திக்குடன் தொடர்ந்து ரகசியத் தொடர்பில் இருந்ததோடு, குடும்பப் பணத்தையும் அவருக்குக் கொடுத்து வந்துள்ளார். இதனை செந்தில்குமார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த காவ்யா, தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காகத் தனது கள்ளக்காதலன் கார்த்திக்குடன் இணைந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டினார்.

   

சம்பவத்தன்று அதிகாலை செந்தில்குமார் தனது டீக்கடையைத் திறக்கச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரைச் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் செந்தில்குமாரின் கை துண்டிக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். விடிய விடிய மது அருந்திவிட்டு அக்கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிலைமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து காவ்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய கார்த்திக் உட்பட மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மதுரையில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.