உத்திரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியை சேர்ந்த சல்மான் என்பவருடைய மனைவி குஷ்ணுமா. இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் 12, 5, 3 வயது மற்றும் ஒரு மாத குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. இதனிடையே அந்த பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதால் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சல்மானுக்கு தெரிய வந்ததால் தன் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தனது கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.
இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கணவன் மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் மனைவி இனி தன்னால் இந்த வீட்டில் வாழ முடியாது என்று கூறி தனது கள்ளக்காதலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கணவர் சல்மான் நேற்று தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு யமுனை நதி மீது உள்ள பாலத்தின் மீது ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்து விட்டார்.
இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை அவருடைய சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில், தன் முடிவுக்கு மனைவியும் அவரது கள்ளக்காதலனும் காரணம் என்று சல்மான் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆற்றில் குதித்த நான்கு பேரும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நீச்சல் வீரர்கள் உதவியோடு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
