திருவாரூர் மாவட்டம் நல்லிணத்தை அடுத்த பேரளம் அருகே உள்ள கொல்லாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த நாகராஜன் (60) என்பவருடைய மனைவி லலிதா (54). இந்த தம்பதியினர் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றன. இதனிடையே சம்பவத்தன்று லலிதா வயல் வேலைக்கு சென்ற போது அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தன் மனைவியை பாம்பு கடித்ததை அறிந்த நாகராஜன் அவசரமாக மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு லலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது அவருக்கு தெரிந்துள்ளது. இதனால் மனமுடைந்த நாகராஜன் பாம்பு கடித்த உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தன்னுடைய மனைவியின் நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் மன வேதனை அடைந்துள்ளார். மனைவி இறந்து விடுவார் என்று நினைத்த அவர் வீட்டில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாகராஜனின் மனைவியின் நலமுடன் வீட்டுக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
