உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமிர்பூர் மாவட்டம் பிர்ஹட் கிராமத்தைச் சேர்ந்த பொலொ கான் என்பவருக்கும், அவரது மனைவி பனா என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொலொ கான், தனது மனைவியை சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரது மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளைக் கடித்துக் குதறியுள்ளார்.
மேலும் கணவரின் இந்த வெறிச்செயலால் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்த பனாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மூக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயங்களுடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவரே மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
