பீகார் மாநிலம் ஆரா நகரில், கர்வா சௌத் பண்டிகை நாளில் தூங்கிக் கொண்டிருந்த சொந்த மனைவியை, அவரது கணவனே கத்தி மற்றும் கத்திரிக்கோலால் 150-க்கும் மேற்பட்ட முறை கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆரா முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பங்கஜ் குமார் தாக்கூர் – நிகிதா குமாரி தம்பதியினருக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், கர்வா சௌத் நாளன்று மனைவி நிகிதா குமாரி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது அமர்ந்து தையலுக்குப் பயன்படுத்தும் கத்தரி மற்றும் கத்தியால் கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் அனைத்துப் பகுதிகளிலும் கொடூரமாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்தப் பெண்ணை மீட்ட உறவினர்கள் ஆரா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விகாஸ் சிங், பெண்ணின் உடலில் 150-க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு, 3 மணி நேரம் போராடி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆரா நகரக் காவல்துறையினர், கொடூரக் கணவன் பங்கஜ் குமார் தாக்கூரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
