“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 74 தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 67 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது; ஏற்கனவே ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விபத்து நடந்த பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த நச்சு வாயு காற்றில் பரவியதால், அப்பகுதி மக்களும் தொழிலாளர்களும் பெரும் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், இந்த விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் காரணங்கள் வெளிவந்துள்ளன. தொழிற்சாலையின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 80 கிலோ கொள்ளளவு கொண்ட சிலிண்டரின் குளிரூட்டும் அமைப்பில் இருந்த ‘பிரஷர் வால்வில்’ ஏற்பட்ட கசிவே இதற்கு முதன்மைக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையில் கடந்த பல ஆண்டுகளாக முறையான பாதுகாப்பு தணிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்குள்ளேயே எவ்வித பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் இன்றி ஆபத்தான முறையில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது. நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கே ஒட்டுமொத்த பாதிப்பும், உயிரிழப்புகளும் இந்த அளவிற்கு அதிகரிக்கக் காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.