தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு வழியாகக் கிளைமாக்ஸை எட்டியுள்ளது. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர், தங்கள் கட்சிக்கு 41 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள திமுக, ஆரம்பத்தில் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற அளவிலேயே பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
இந்த இழுபறிக்கு நடுவே, “கூட்டணிக் கட்சிகளின் நலனையும் நாம் பார்க்க வேண்டும், இது நமக்கு மிக முக்கியமான தேர்தல்” என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் மேலிடத்திற்குச் சூழலைப் புரியவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு எனக் கூறிய ஸ்டாலின், இறுதியாக 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் (28+1) என்ற ஆஃபரை வழங்கினார். அதே சமயம், மத்தியில் நிலவும் சித்தாந்த ரீதியான ஒற்றுமை என்றும் தொடரும் என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த உறுதியான நிலைப்பாடு டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், திமுக தரப்பிலிருந்து கனிமொழி எம்.பி மூலமாகத் தூது விடப்பட்டது. கனிமொழி நேரடியாகச் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி, தமிழ்நாட்டின் தற்போதைய கள நிலவரத்தையும், கூட்டணிக் கட்சிகளுக்கான இடப் பகிர்வு தேவையையும் விரிவாக விளக்கினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், ராகுல் காந்தி திமுகவின் 28+1 என்ற கணக்கிற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த இணக்கமான சூழல் உருவான பின்னரே, செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளார்.
ராகுல் காந்தியின் சம்மதம் கிடைத்துவிட்டதால், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் எனத் தெரிகிறது. நீண்ட இழுபறிக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்தத் தொகுதிப் பங்கீடு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குள் நிலவிய சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
