தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்தான் கஞ்சா கருப்பு. கடந்த 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கஞ்சா தோட்டத்தில் வேலை செய்பவர் போல நடித்ததால் கருப்பு என்ற அவரின் பெயருடன் கஞ்சா ஒட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து ராம், திருடிய இதயத்தை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுப்பிரமணியம் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவ்வாறு கடந்த 2010 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்படியான நிலையில் கஞ்சா கருப்பு மதுரவாயில் ஸ்ரீ கிருஷ்ணா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகின்றார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு சென்னையில் படப்பிடிப்பு இருக்கும்போது கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். 20000 ரூபாய் வாடகையில் கஞ்சா கருப்பு வீடு எடுத்துள்ள நிலையில் அவர் ஊரில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகை விட வீட்டு உரிமையாளர் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் தனது உடமைகள் இருக்கும்போது தனக்குத் தெரியாமல் அத்துமீறி வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்ததாக மதுரவாயல் காவல் நிலையத்தில் உரிமையாளர் மீது கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டு வாசலில் கஞ்சா கருப்பு அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

கஞ்சா கருப்பு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள கஞ்சா கருப்பு, ஒழுங்கா நடிச்சிட்டு இல்லாம சொந்த படம் எடுத்து சொந்த வீடு என் கையில இருந்து போயிருச்சு. கடன் இல்லாமல் இந்த வீட்டில இருக்கேன்னு நினைச்சேன். சினிமாக்காரன்னா ஏமாத்திடுவான்னு நினைக்கிறதா என்னிடத்தில் வீட்டு உரிமையாளருக்கு தெரிஞ்சவர் ஒருவர் சொன்னார். என்னை பார்த்தால் ஏமாத்துற மாதிரியா தெரியுது. நான் வீட்டை காலி பண்ணிடுறேன்னு சொன்ன பிறகும் நான் இல்லாத போது வீட்டை உடைத்து உள்ளே போறது நியாயமான விஷயமாக நான் பார்க்கவில்லை. அதனால் தான் நான் போலீசுக்கு சென்றேன் என கஞ்சா கருப்பு கூறினார்.

இப்படியான நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு தான் வாடகை இருந்த வீட்டுக்கு போலீசார் உடன் சென்று சோதனை செய்துள்ளார். அங்கு தான் வாங்கிய கலைமாமணி விருதை யாரோ திருடிட்டு போயிட்டாங்க என்று கதறினார். அது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளர் தன்னுடைய பொருள்களை சேதப்படுத்தி விட்டதாக போலீசார் முன்பு கதறிய கஞ்சா கருப்பு 1.50 லட்சம் ரூபாய் பணத்தையும் காணவில்லை என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
