“பில் கட்ட காசில்லை.. இதுல பஞ்சாயத்து ஒரு கேடா?”… இணையத்தில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்… பாகிஸ்தானை அலறவிடும் ஹோட்டல் பில் சர்ச்சை…!!!

By Muthu Mani on சித்திரை 15, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் எடுத்து வரும் ராஜாங்க முயற்சிகள் தற்போது ஒரு விசித்திரமான சர்ச்சையில் சிக்கியுள்ளன. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பாகிஸ்தானின் செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், தங்குமிடம் தொடர்பான கட்டண விவகாரம் அந்த நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்கான செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஏற்பட்ட குழப்பமே இந்தச் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10 முதல் 12-ம் தேதி வரை சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்த பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளரே கட்டணத்தை வசூலிக்க நேரடியாகத் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுவது, பாகிஸ்தான் அரசின் கடும் நிதி நெருக்கடியையே காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. ஒரு உலகளாவிய விவகாரத்தைத் தீர்க்க முயலும் போது, அடிப்படை வசதிகளுக்கான செலவைக் கையாளுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி அந்த நாட்டின் நிர்வாகத் திறனைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

   

இதனிடையே, நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைதி முயற்சிகளுக்குப் பங்களிக்கும் நோக்கில், தூதுக்குழுவினருக்கான தங்குமிடத்தைச் செரீனா ஹோட்டல் நிர்வாகமே இலவசமாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் அத்துடன் முடிவுக்கு வரவில்லை. ஹோட்டல் நிர்வாகம் தானாக முன்வந்து செலவை ஏற்றதாகக் கூறப்படுவது உண்மையல்ல என சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், நிதி விவகாரத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

   

இந்தச் சூழலை இந்திய நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கிண்டலடித்து வருகின்றனர். “அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தத்தில் எந்தச் சிக்கலும் இல்லையாம், ஹோட்டல் பில்லை யார் கட்டுவது என்பதில் தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாம்” எனப் பலரும் நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியிலும், மத்திய கிழக்கு பதற்றத்தைத் தணிக்க அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையை இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் தீவிரமாகத் தயாராகி வருகிறது.