அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

By Nanthini on சித்திரை 22, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சானமாவு பகுதியில், உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தும், பெங்களூருவில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர மோதலில் கார் உருக்குலைந்து முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த மற்றொரு இளைஞரான சதீஷ்குமார் என்பவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாலையில் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகள் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர்கள் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தவர்கள் என்றும், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக (வாக்களிப்பதற்காக) பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான பெண்ணாகரம் பகுதிக்கு வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வத்துடன் ஊருக்குத் திரும்பிய போது நிகழ்ந்த இந்த விபத்து பலரையும் நெகிழ வைத்துள்ளது.

   

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.