கர்நாடகா மாநிலம், தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள ‘காவேரி’ என்ற கல்குவாரியில் நிகழ்ந்த பயங்கர பாறை சரிவு விபத்தில் பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த சமயத்தில் குவாரியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், அங்குள்ள பிரம்மாண்ட பாறைகளை அகற்றும் பணியில் ஹிட்டாச்சி இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அப்போது, இயந்திரத்தை இயக்கிய நபர் அருகில் தொழிலாளர்கள் நின்றுகொண்டிருந்ததை கவனிக்காமல் பாறையை நகர்த்தியதால், எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய பாறை சரிந்து விழுந்து இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
