‘அட கொடுமையே’…கர்ப்பமான 17 வயது சிறுமி… “தாய்மாமன் செய்த துரோகம்”… குழந்தையை மறைக்க முயன்ற தாய்?… போக்சோ வழக்கில் சிக்கிய குடும்பம்… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!

By Visaka on ஆடி 21, 2026

Spread the love

தேனி மாவட்டத்தில், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த அவரது தாய்மாமன் முகேஷ் (27) என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிறுமி பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக அக்குழந்தை முதலில் வேறொருவரிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் பராமரிக்க முடியாத சூழலால் குழந்தை நலப் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், 2023 நவம்பர் மாதத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முகேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கை விசாரித்த தேனி மாவட்டக் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ச. எழில், முகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இரண்டாவது எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த சிறுமியின் தாயார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால மறுவாழ்வைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அபராதத் தொகையைக் கழித்து மீதமுள்ள ரூ.4.90 லட்சத்தைச் சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகச் சேமித்து, அவர் வயது வந்த பிறகு பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.