31 கிலோ எடை குறைப்பு.. 6 வருட உழைப்பிற்கு வெற்றி கிடைத்ததா ..? ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் முழு விமர்சனம்..

By Deepika

Updated on:

இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ், அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஆடுஜீவிதம். மலையாளத்தில் உருவாகி உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

Prithviraj in aadujeevitham

2018 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவர் கண்ணிலும் இப்படத்தின் தாக்கம் தெரியும்.

   

நஜீம் முகமது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு நண்பரின் உதவியோடு சவூதி அரேபியாவுக்கு செல்கிறார், அங்கு சென்ற பின் தான் தெரிகிறது ஆடு மேய்க்கும் வேலைக்கு கொத்தடிமையாக வேலைக்கு வந்த விஷயம். அங்கு பெரும் சித்ரவதைகளை அனுபவிக்கும் நஜீம் அந்த கும்பலிடம் இருந்து மீண்டு வந்தாரா என்பது தான் ஆடுஜீவிதம் படத்தின் மீதிக்கதை.

Prithviraj in aadujeevitham

படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி தள்ளுகிறார்கள். இயக்கமும் இசையும் மிரட்டல் என்றால் ப்ரித்விராஜின் பங்கு அளப்பரியது. ப்ரித்விராஜுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என கூறுகிறார்கள். அவரின் உழைப்பும் அதற்கு தகுதியானது தான். ஆம், இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் தனது உடலில் பெரிய மாற்றத்தை மேற்கொண்டார். அவர் கொடுத்த சமீபத்திய பேட்டியில், பிருத்விராஜ் 72 மணி நேரம் உணவு எதுவுமே உட்கொள்ளாமல் இருந்ததாகவும், மீதி நேரங்களில் வெறும் காபி மற்றும் தண்ணீர் மட்டுமே குடித்து 31 கிலோ எடையை குறைந்ததாக கூறினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தனது உடலை இரண்டு முறை குறைக்க நேர்ந்ததாகவும் கூறினார்.

மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘பட்டினி கிடப்பதுதான் இந்த தோற்றத்தைப் பெற ஒரே வழியாக இருந்தது . ஏனென்றால் உணவில்லாமல் பட்டினியால் வாடும் நபரின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல, அந்த தோற்றத்தை பெறுவதற்கு பெரும்பாலான நேரங்களில் பசியுடன் இருப்பவனைப் போல நானும் இருந்தேன் என்றார்.

Prithviraj hardwork for aadujeevitham

இந்த மாற்றம் உடலுக்கான மாற்றமாக மட்டுமில்லை, மனதிற்கான மாற்றமாகவும் இருந்தது என்று கூறினார். மேலும், உணவு எதையுமே எடுத்துக்கொல்லாமல் இருந்துவிட்டு மறுநாள் கண்விழிக்கும் போது, ​​கிடைப்பதை எடுத்து சாப்பிடு என்று மனம் சொல்லும், அங்கு தான் கண்முன்னே உண்மையான சவால் வந்து நிற்கும். முடிந்தவரை உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது, ஆனால் நான் 31 கிலோ வரை எடை குறைந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்று கூறினார்.

மலையாள இலக்கியத்தில் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையான நாவல் ‘ஆடு ஜீவிதம்’. இந்த நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 2008-ல் வெளிவந்த இந்த நாவலை வாசித்ததில் இருந்தே, திரைப்படத் தயாரிப்பாளர் பிளெஸ்ஸி அதைத் திரைப்படமாக்க விரும்பினார். 2010 ஆம் ஆண்டு, இந்த படத்தின் நாயகன் பிரித்விராஜ் என்று அறிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஆண்டில் துபாய் மற்றும் ராஜஸ்தானில் தொடங்குவதாக இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. 2012 ஆம் ஆண்டில், அதன் தயாரிப்புக்கு தேவையான பட்ஜெட் மலையாள சினிமாவுக்கு மிக அதிகம் என்று பிளெஸ்ஸி கூறினார்.

Aadujeevitham

2015 ஆம் ஆண்டில், தொழிலதிபர் கேஜி ஆபிரகாம் வந்த பிறகு படம் மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையில், பல சிக்கல்கள் ஏற்பட்டதால், 2017 ஆம் ஆண்டில், சோமாலியா மற்றும் ஹைட்டியைச் சேர்ந்த நடிகர்களை வைத்து படத்தின் காஸ்டிங் இறுதி செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Deepika