தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘சிங்கப்பெண்’ சிறப்புப்படையின் பிரத்யேக அவசர உதவி எண்ணாக ‘1091’-ஐ தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவசர காலங்களில் பெண்களுக்கு மிக விரைவான பாதுகாப்பையும் தடையற்ற ஒருங்கிணைப்பையும் உறுதி செய்வதற்காக, இந்த எண் ‘112’ என்ற தேசிய அவசர கால உதவி அமைப்புடன் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளைத் தாமதமின்றி கையாண்டு, உடனடியாக கள நடவடிக்கை எடுப்பதற்காகவே பிரத்யேக கட்டுப்பாட்டுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஆபத்தான சூழலில் இருக்கும் பெண்களுக்கு எந்த நேரத்திலும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தச் சிறப்புப் பிரிவுகள் அனைத்தும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகச் செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
