தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரிக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
