அட கடவுளே..! நாட்டை உலுக்கும் கோடை வெயில்.. ஒரே நாளில் 40 பேரை பலிவாங்கிய ஹீட்ஸ்ட்ரோக்.. வானிலை மையம் அவசர எச்சரிக்கை…!

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்பவாதத்தால் (Heatstroke) ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஹரியானாவின் சிர்சா பகுதியில் அதிகபட்சமாக 118 டிகிரி ஃபாரன்ஹீட்டும், டெல்லியின் அயநகர் பகுதியில் 116 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது.

இந்த வெப்ப அலையின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பீகார் மாநிலத்தில் 14 பேரும், ஒடிசாவில் 5 பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு 1,300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   

மிகவும் சோகமான விஷயமாக, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உயிரிழந்தவர்களில் 25 பேர் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. வெயிலின் கொடுமை தாங்காமல் தேர்தல் பணியில் இருந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.