“காலை டிராப்… பிற்பகல் 3:30-க்கு ஷார்ப்”… செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த ட்விஸ்ட்…. தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளன. இன்று காலையிலேயே இந்த மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நேரில் ஆஜராகி வாதாட உள்ளதால், வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை பிற்பகல் நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜாவிடம், தங்களுக்கு ஆதரவாக செயல்பட ரூ.35 கோடி தருவதாக சிலர் பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

   

போலீசாரின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய குற்றச்சாட்டில் ‘ஐ.பி.டி.எஸ்.’ என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உட்பட 9 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலின் படியும்தான் இந்த ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜூலை 6-ஆம் தேதியிட்டு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர்கள் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.

   

இந்தச் சூழ்நிலையில்தான், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அசோக்குமாரைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், “ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூட எனது பெயர் இடம் பெறவில்லை. முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன், பழிவாங்கும் நடவடிக்கையாக எனக்கு எதிராக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் போலீசார் என்னை சட்டவிரோதமாகக் கைது செய்யக்கூடும் என்பதால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இன்று பிற்பகல் நடக்கவிருக்கும் நீதிமன்ற விசாரணை தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.