யாரும் எதிர்பார்க்காத ‘திடீர்’ ட்விஸ்ட்…. ராதாகிருஷ்ணன் IAS போட்ட ரகசிய ஸ்கெட்ச்…. முக்கிய பதவியை கொடுக்கப்போகும் முதல்வர் விஜய்….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நீண்ட நாட்களாகக் காலியாக இருக்கும் நிலையில், அந்த உயரிய பொறுப்புகளைக் கைப்பற்ற ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திரைமறைவில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசின் அதிகார மையங்களை அணுகி, தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தப் பலரும் வரிந்துகட்டி நிற்கும் சூழலில், மாநிலத்தின் உயர்மட்டத் தலைமை யாருக்கும் தெரியாமல் மிக அமைதியாக ஒரு காயை நகர்த்தி வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் திடீரென அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டது நிர்வாக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மின் வாரியம் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறையிலிருந்து, ஒப்பீட்டளவில் சாதாரணமான ஒரு பதவிக்கு அவர் மாற்றப்பட்டது ஒரு ‘டம்மி’ நியமனம் என்றே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இந்த இடமாற்றத்தின் பின்னணியில் மிகச் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு வியூகம் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

   

வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெறும் ராதாகிருஷ்ணன், ஓய்வுக்குப் பிறகும் முக்கியப் பதவியில் நீடிக்க விரும்பி தலைமைச் செயலாளரிடம் ஆலோசித்துள்ளார். இதனையடுத்தே, காலியாக உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியை அவருக்கு வழங்குவது குறித்த திட்டம் உருவானது. இதற்கு முதல்வரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. இருப்பினும், மின் வாரியத் தலைவராக இருப்பவரே நேரடியாக ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டால் எழும் தேவையற்ற சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தவிர்க்கவே, அவர் தற்காலிகமாக வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

   

இந்த மாஸ்டர் பிளானின்படி, முதலில் அவரை நடுநிலையான ஒரு பதவியில் அமர்த்தி, செப்டம்பர் இறுதியில் அவர் ஓய்வுபெற்றவுடன், அக்டோபர் மாதத்தில் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்க ரகசிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி மேலிடத்தின் இந்தத் திட்டம் பற்றி அறியாமல், மற்ற ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் இன்னமும் அந்தப் பதவியைப் பிடிக்க அதிகார மையங்களுக்குத் தூது அனுப்பிக் கொண்டிருப்பதுதான் இந்த விவகாரத்தின் சுவாரசியமான திருப்பம்.