சேலம் மாநகராட்சி மூக்கனேரி பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் நடந்து வரும் கட்டுமானப் பணியின் போது, கழிவுநீர் கால்வாயின் மேல் பகுதியில் சிமென்ட் ஸ்லாப் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் வடக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ., சிவக்குமார் ஒப்பந்ததாரரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகாமல் பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்த ஸ்லாப் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால், அங்கு ஆய்வு செய்யச் சென்ற எம்.எல்.ஏ., சிவக்குமார் அப்பணிகளைத் தடுத்து நிறுத்த முயன்றதுடன், ஊழியர்களையும் ஒப்பந்ததாரரையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும், “நான் நினைத்தால் உங்களைச் சிறைக்கு அனுப்பிவிடுவேன்” என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களின் பாதுகாப்பைக் கருதியே ஸ்லாப் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மக்கள் பிரதிநிதியின் இந்த அதிகாரப் போக்கு மற்றும் மிரட்டல் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
