“நீ யாரா வேணாலும் இரு.. ஆனா என்கிட்ட கொஞ்சம்”… ஆர்சிபி-க்கு மரண அடி…. பவர் பிளேயிலேயே போட்டியை முடித்த வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம்…!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. ரஜத் பட்டிதர் 63 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 29 ரன்களும் எடுத்து வலுவான இலக்கை நிர்ணயித்தனர். கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி மிரட்டலான தொடக்கத்தை அளித்தது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பவுண்டரிகளை விளாசத் தொடங்கிய வைபவ், அனுபவ வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விரட்டிய அவர், அடுத்து அபினந்தன் சிங் ஓவரிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் வீசிய ஓவரில், எவ்வித பயமுமின்றி 4, 4, 4, 6 என தொடர்ச்சியாக ரன்களை குவித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

   

இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே முடிவதற்குள் அரைசதம் கடப்பது அவருக்கு இது மூன்றாவது முறையாகும். புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் மட்டுமல்லாது க்ருணால் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் பந்துவீச்சையும் அவர் பதம் பார்த்தார். இறுதியில் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்.

   

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ், தற்போது ஹேசல்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரையும் திணறடித்துள்ளார். இவருடைய இந்த அசாத்தியமான பேட்டிங் திறமை, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக அவரை உருவெடுக்கச் செய்துள்ளது. இளம் வயதிலேயே இத்தகைய முதிர்ச்சியான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.