மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 39-வது தவணை தொகையான ரூ.1,000 தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் வரை தொடர்ந்து உரிமைத்தொகை பெற்று வந்த பயனாளிகளில் பலர், தங்களுக்கு இந்த மாதத்திற்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், தங்களது பெயர்கள் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதோ என்ற அச்சமும் குழப்பமும் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆனால், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் பட்டியலிலிருந்து யாரும் நீக்கப்படவில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பணம் வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதத்திற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளின் சர்வர் தொழில்நுட்பக் கோளாறு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ‘கே.ஒய்.சி’ விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் பரிவர்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பணம் வராத பயனாளிகள் அச்சப்படத் தேவையில்லை; உடனடியாகத் தங்களது வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு கணக்கின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
